சமயபுரம் மாரியம்மன்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சமயபுரம் மாரியம்மன் பற்றிய பதிவுகள் :

 சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கதும், தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக திகழ்கிறது சமயபுரம் என்கிற கண்ணபுரம்.

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது.

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத்துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.

பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும் தலம் சமயபுரம்.

உரிய காலத்தில் தேவையான, கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்பது இந்த அம்மனது அடைமொழி.

சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னன் ஒருவனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன. அந்த இடம் பின்னர் வேப்ப மரக் காடாயிற்று.

சமயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள், கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.

அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர் (அந்த இடம் தற்போது இனாம் சமயபுரம் (தாய் வீடு) எனப்படுகிறது!).
அவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக் கொட்டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.

இந்த நிலையில் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார். அப்போது அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

தற்போதைய ஆலயம் கி.பி. 1804 ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

‘சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்க வேண்டும். இது பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும்!’ என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சமயபுரம் கோயில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களது உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள் ளன. எனவே, இந்தத் தலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேலாக சக்தித் தலங்களுள் ஒன்றாக விளங்குவதை அறியலாம்.

இந்த மாரியம்மன் கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன், போஜீஸ்வரன் மற்றும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி முக்தீஸ்வரன் கோயிலும் இடம்பெற்றுள்ளன.

மாயனின் சகோதரியான சமயபுரத்தாள், திருவரங்கத்திலிருந்து வந்தவள் என்பதால், இந்தக் கோயிலின் நிர்வாகமும் பல நூற்றாண்டுகளாக திருவரங்கம் கோயில் வசமே இருந்தது. பக்தர்களது முயற்சியால், 1984-ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.

பக்தர்களிடம் வசூலித்த பணம் மூலம் கிருபானந்த வாரியார் இந்தக் கோயிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.

சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு, மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு,வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.

மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2ஆம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.

இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அன்றைய கோயில் நிர்வாகத்தினர், இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று ஸ்ரீகாஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர். அதன்படி நுழைவாயிலின் (தற்போது மாற்றபட்டுள்ளது) வலப்புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970-ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள்அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக பக்தர்கள் காணிக்கை வழங்கிய தங்கத்தின் எடை 71 கிலோ ,127 கிராம். இத்துடன் 3 கிலோ288 கிராம் செம்பு பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

முலஸ்தானத்தில் அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. இடக் காலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்க விட்டுள்ள வலக் காலின் கீழ் அசுரர்களது தலைகள் காணப்படுகின்றன. இவளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள் புரிகிறாள் கண்ணபுரத்தாள்.

சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை.

சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

வசுதேவர்,தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன், யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள். அவளே சமயபுரத்திலும் அம்மனாக விளங்குகிறாள் என்பதும் ஐதீகம்.

இந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.

கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

கோயிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்பாள் இரவு நேரத்தில் வலம் வருவதாக ஐதீகம்.

காலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

சமயபுரம் கோயிலின் தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.

இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர்.

இங்குள்ள அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

இந்த மாரியம்மனை அயோத்தி மன்னன் தசரதன் வழிபட்டதாகவும், அருகில் உள்ள ஓம்கார உஜ்ஜயினி காளி ஆலயத்துக்கு விக்கிரமாதித்ய மகாராஜா வந்து வழிபட்டதாகவும் கதைகள் உள்ளன.

உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்.

இங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் 
விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோயில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் பூஜிக்கிறார்கள்.

தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். கொள்ளி டம்தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர். தை மாத பெருவிழாவின் 2ஆம் திருநாளிலிருந்து 8ஆம் நாள் வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை ஆகிய வாகனங்களில் அம்மன் உலா வருகிறார். 9ஆம் நாள் தெப்பத் திருவிழா.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post