புரட்டாசி மாத சிறப்புகள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புரட்டாசி மாத சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும், அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் ஆகும்.

அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நினைத்து சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும், லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. நீண்டகால கடன் தொல்லையில் இருந்து விடுபட மகாலட்சுமி வழிபாடு சிறந்தது.

புரட்டாசி வெள்ளிக்கிழமையில், மகாலட்சுமியை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

மகாலட்சுமியின் அருள் பெற வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை :

ஒவ்வொரு வெள்ளி அன்று லட்சுமிதேவியை வணங்குவதோடு சில விஷயங்களை பின்பற்றினால் துன்பங்கள் விலகி அவரின் அருள் கிடைப்பதோடு, பணமும், தானியமும் குறையாத அருளை பெறலாம்

இதேபோல் புரட்டாசியில் கடைபிடிக்க வேண்டிய சில விரதங்கள்:

சித்தி விநாயக விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும்.

சஷ்டி - லலிதா விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைபிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பரமேஸ்வரி சர்வ மங்களங்களையும் அருள்வாள்.

அனந்த விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.

அமுக்தாபரண விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

ஜேஷ்டா விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.

மஹாலட்சுமி விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியை பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

கபிலா சஷ்டி விரதம்:

புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் சித்திகளை தரும்.

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post