வேண்டிய வரமளிக்கும் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வேண்டிய வரமளிக்கும் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் பற்றிய பதிவுகள் :

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முகப்பு வாயில் தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலையானது சமயபுரம் மாரியம்மன் கோயில். 

இது, தமிழ் நாட்டின் முக்கிய நகரமும், முற்கால சோழ வளநாட்டின் தலைநகரமும் ஆன, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமயபுரத்து மாரியம்மன், இங்கு, மக்களின் குறைகளை போக்கி வேண்டியவருக்கு வேண்டிய வரமளிக்கும், மகாசக்தியாக மகமாயி, அன்னை பராசக்தியாக கோயில் கொண்டிருக்கிறாள்.

சமயபுரம் வரலாறு

தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது.

மேலே குறிப்பிட்ட கால கட்டத்தில் வைணவி என்ற மாரியம்மன் விக்கிரகம் ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஐயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். 

அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். 

பிறகு அம்பாளின் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். (தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்).

அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அம்பாளின் விக்கிரகத்தை பார்த்து அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அம்பாளை வழிபட்டு அம்பாளுக்கு ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்று பெயரிட்டு வழிபட்டனர்.

விஜயநகர மன்னர்கள்

இக்காலத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள். அம்மனுக்கு கோவிலையும் கட்டினார்கள்.

விஜயரெங்க சொக்கநாதர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனிக்கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று, ‘சமயபுரம் மாரியம்மன்’ கோவிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

அம்மனின் அழகும் அருளும்

மக்களை இரட்சித்து, வேண்டிய வரங்களைக் கொடுத்து, காத்துவரும் அம்மனின் அழகு தெய்வீகமானது. அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். 

அந்த அழகைக் கண்டால் மனம் உருகும், மனம் ஒருமைப்படும், மனத்திலுள்ள மாசும் அகலும். தாயைத்தேடி அலைந்தவர்க்கு, கருணையே வடிவாக அமர்ந்திருக்கும் தாய், ஆயி மகாமாயி காட்சி தருவாள்.

ஆடி வெள்ளி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளித் திருவிழா நடைபெருகிறது. இதில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 

ஆடி மாதத்தில் எல்ல வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். திருச்சியில் உள்ள அத்தனை பெண்களும் அன்னையை தரிசிக்க கட்டாயமாகச் செல்வர். அதுவும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடுவர்.

பூச்சொரிதல் விழா

அன்னையை காண தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.

விழாக்காலங்களில் சொல்ல முடியாத அளவு கூட்டம் வரும். சித்திரைத் தேர்த்திருவிழாவன்று கூட்டம் அலைமோதும். இலட்ச கணக்கில் மக்கள் வருவர். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமே.

ஆயிரம் கண்ணுடையாளை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து அவளை மனம் குளிர தரிசித்து அவளின் ஆசீர்வாதத்துடன் செல்கின்றனர்.

மாரியம்மனுக்கு நாடெங்கும் பக்தர்கள் உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

சமயபுரத்தின் மற்ற பெயர்கள்

சமயபரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு கீழ் காணும் பெயர்களும் உண்டு.

கண்ணனூர்
கண்ணபுரம்
விக்ரமபுரம்
மாகாளிபுரம்

சமயபுரத்தில் உள்ள மற்ற கோவில்கள்

வடக்கே — செல்லாயி அம்மன் கோவில், போஜீஸ்வரன் கோவில்

கிழக்கே — உஜ்ஜயினி மாகாளி கோவில், முத்தீஸ்வரன் கோவில்

தீர்த்தம் — பெருவளை வாய்க்கால்

தீர்த்தம் — மேற்கே உள்ள மாரி தீர்த்தம் ( தெப்பக்குளம் )

ஸ்தல விருட்சம் — வேப்ப மரம்
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post