திருநீறு மகத்துவம், பயன்படுத்தும் முறை மற்றும் பயன்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருநீறு மகத்துவம் பற்றிய பதிவுகள் :

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான், ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. 

சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

திருநீறு என்று அழைக்கப்படும் விபூதியானது நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. இதன் மகத்துவம் என்னவென்றால், விபூதியை நாம் பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன. 

மிக முக்கியமாக, விபூதி என்பது சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனம். அதுமட்டுமல்லாமல், நம் உடலின் சக்தி ஓட்டத்தை வழிநடத்தவும், கட்டுப்படுத்தவும் நாம் விபூதியை பயன்படுத்த முடியும்.

இது தவிர, இதை நம் உடலில் வைத்துக் கொள்வது, நம் நிலையற்ற தன்மையை நமக்கு தொடர்ந்து நினைவூட்டுவதாகவும் இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் நாம் இறக்க நேரிடும். இறந்துவிட்டால், இந்தச் சாம்பல் தான் மிஞ்சும் என்று தொடர்ந்து நம் நினைவில் இருக்கச் செய்யும்.

யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்த முடியாது என்றால், அதற்கு ஒரு மாற்றாக பசுவின் சாணத்தை உபயோகிக்கலாம். 

அத்துடன் வேறு சிலவற்றையும் கலந்து தான் விபூதி செய்வோம் என்றாலும், அடிப்படைப் பொருள் பசுவின் சாணம் தான். இந்த சாம்பலையும் உபயோகிக்க முடியவில்லை என்றால், அடுத்ததாக அரிசியின் உமியைக் கொண்டு தயாரித்த விபூதியை பயன்படுத்தலாம். இது, உடல் என்பது பிரதானம் அல்ல, அது வெறும் உமி என்பதை குறிக்கும்.

திருநீறு வகைகள்:

1. கல்பம்
2. அணுகல்பம்
3. உபகல்பம்
4. அகல்பம்
5. இரட்சை
6. சாரம்
7. பஸ்மம்
8. பசிதம்
9. விபூதி

நாம் ஏன் விபூதி பயன்படுத்த வேண்டும்?

விபூதியை முறையாகத் தயாரித்து, அதை உடலில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால், விபூதி உங்கள் உள்வாங்கும் தன்மையை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், இதை உங்கள் உடலில் நீங்கள் எங்கு வைக்கிறீர்களோ, அவ்விடத்தின் கிரகிக்கும் திறன் அதிகரித்து, நீங்கள் உயர்ந்த பரிமாணத்தை நோக்கிச் செல்ல வழிசெய்கிறது.

அதனால், காலையில் நீங்கள் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன், விபூதியை உங்கள் உடலின் குறிப்பிட்ட சில இடங்களில் பூசிக் கொண்டால், அது, உங்களை சுற்றி இருக்கும் தெய்வீக சக்தியை நீங்கள் உள்வாங்கக் கை கொடுக்கும் தீயவற்றை அல்ல.

விபூதியை எடுக்க உங்கள் மோதிர விரலையும் கட்டைவிரலையும் பயன்படுத்த வேண்டும். வாழ்வை நாம் ஏழு பரிமாணங்களில் உணர முடியும். இந்த ஏழு பரிமாணங்களைக் குறிக்கும் விதத்தில் நம் உடலின் சக்திநிலையில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளன. 

இந்த சக்கரங்கள், நம் சக்தி உடலின் சந்திப்பு மையங்கள். இவை மிகவும் சூட்சுமமானவை. இவை கண்களுக்கு புலப்படாது. அனுபவப்பூர்வமாக இந்தச் சக்கரங்களை நாம் உணர முடியுமே தவிர, உடலை இரண்டாக வெட்டி பார்த்தால் இவற்றைப் பார்க்க முடியாது. உங்கள் சக்தி மேன்மேலும் தீவிரமாகும் போது, இயற்கையாகவே உங்கள் சக்தி ஒரு சக்கரத்திலிருந்து அடுத்த சக்கரத்திற்கு உயரும். 

சக்தியின் தீவிரத்தைப் பொறுத்து தான் நாம் வாழ்வை உணரும் விதம் அமைகிறது. உயர்நிலை சக்கரங்கள் வழியே நாம் வாழ்வை உணர்வதற்கும், அடிநிலை சக்கரம் வழியே வாழ்வை உணர்வதற்கும், சூழ்நிலை ஒன்றாகவே இருந்தாலும், நம் அனுபவம் பெரிதும் வித்தியாசப்படும்.

கிடைக்கும் பலன்கள்:

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். 

பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளும் சாரும் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே!

திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு முறை பாவங்களை செய்த ஒருவன் இறந்துபோனான். 

அவனுடைய வாசலில் இருந்த சாம்பலில் புரண்டு எழுந்த நாயொன்று அவன் மீது நடந்து சென்றது. அப்போது அந்த நாயின் கால்களிலிருந்த சாம்பாலனது அவனுடைய உடலில் பட்டது. அவன் உடலில் திருநீறு இருப்பதை அறிந்த யமதூதர்கள் விலகினர், அவனுடைய உயிரினை சிவகணங்கள் கையிலாயத்திற்கு எடுத்து சென்றன.

இந்த கதையானது திருநீறு அணிவதால் அவனுடைய பாவங்கள் போகின்றன என்பதை மக்களுக்கு கூறுகிறதாகும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post