ராகு கால வளர்பிறை பிரதோஷம் மற்றும் வைகாசி விசாகத் திருநாள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ராகு கால வளர்பிறை பிரதோஷம் மற்றும் வைகாசி விசாகத் திருநாள் பற்றிய பதிவுகள் :
 
பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுவது மிகுந்த பலன் தரும் என்பது ஐதீகம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைக்கு தனிச் சிறப்பு உண்டு.

பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை.

எனவே ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும்.

சிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். 

பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

வைகாசி விசாகத் திருநாள்

வைகாசி மாதம், விசாக நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். அன்றுதான் வேல்முருகன் அவதரித்தார். முருகப் பெருமானின் பக்தர்கள் விரும்பிக் கொண்டாடும், விரதமிருந்து வழிபடும் திருநாள் வைகாசி விசாகத் திருநாள். 

இது முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்டு சரவணப்பொய்கையில் அவதரித்த திருநாள். 

என வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன். 

அன்னை சக்தி கொடுத்த சக்திவேலும், தந்தை ஈசன் கூட அனுப்பிய வீரபாகு உள்ளிட்ட நவ வீரர்களும் சேர்ந்து சூரபத்ம வதமும் நிறைவேறி, முருகப்பெருமான் அவதார நோக்கமும் நிறைவேறியது. 

'இந்த நாளில் வேண்டிக்கொள்ளும் எந்த வேண்டுதலும் தடையற நிறைவேறும்’ என்பது ஆன்றோர்கள் வாக்கு. எனவே, இந்த வைகாசி விசாகத்தில் முருகப்பெருமானை மனமுருக வேண்டுவோம். அவன் புகழைப் பாடுவோம். 

27 நட்சத்திரங்களில் விஷேசமானது விசாக நட்சத்திரம். முருகப்பெருமான் தோன்றியதால் இந்த நட்சத்திரம் இன்னும் விஷேசமானது என்பார்கள். 

வைகாசி விசாகம்தான் புத்தர் தோன்றிய நாள் மற்றும் மறைந்த நாள் என்றும் கூறப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தினமும் வைகாசி விசாக நாள் என்றே கூறப்படுகிறது.

யமதர்மன் தோன்றிய தினமும் இதுவே என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் யமலிங்கத்தை வணங்குபவர்கள் மரண பயமின்றி வாழலாம். 

இப்படி எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது வைகாசி விசாகத் திருநாள். 

இந்த நாளில் முருகப்பெருமான் கோயிலில் மட்டுமின்றி, முருகன் சந்நிதி அமைந்து இருக்கும் சிவன் கோயிலிலும் வசந்தோத்ஸவமும் பிரமோற்ஸவமும் நடைபெறுவது வழக்கம்.

 திருத்தணி முருகப்பெருமான் ஆலய வைகாசி விசாகத் திருவிழா மற்ற எல்லா ஆலயங்களைவிடவும் சிறப்பானது என்று சொல்லப்படுகிறது. 

வைகாசி விசாகத்தன்று உண்ணாவிரதம் இருந்து பால் குடம் எடுத்து முருகனை வணங்கினால், ஞானமும் கல்வியும் பெருகும் என்பார்கள்.

விசாக நாளில் முருகன் கோயில்களில் பலவிதமான காவடிகள் முருகப்பெருமானுக்கு எடுப்பது நம் தொன்றுதொட்ட வழக்கம். 

பால், பன்னீர், புஷ்ப, சந்தன, மச்ச காவடிகள் என எத்தனை எத்தனைவிதமான காவடிகள் அன்றைய தினம் கோயிலில் காணலாம் தெரியுமா? தோள் வலிக்க, காவடி சுமப்பவர்களை முருகன் தோள்கொடுத்து காப்பான் என்பது நம்பிக்கை. 

குழந்தை பாக்கியமில்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று முழுக்க உண்ணாவிரதமிருந்து, முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள். 

இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் ஏழை எளியவர்களுக்கு உணவு, மோர், பானகம், பழங்கள் ஆகியவற்றை தானமாக கொடுக்கலாம் அது செல்வவளத்தை அளிக்கும்.

வைகாசி விசாகத்தன்று உண்ணாவிரதமிருந்து முருகனை வணங்கினால் பகை விலகும், துன்பங்கள் நீங்கும் என்கிறார்கள்.

வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராட வேண்டும், நெற்றி நிறைய திருநீறிட்டு, சுத்தமான ஆடைகளை அணிந்து விரதத்தைத் தொடங்க வேண்டும்.

இந்த ஒரு நாள் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதமிருக்கலாம். அப்படி இருக்க இயலாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

 முருகனுக்குரிய திருமந்திரங்களைச் சொல்லி விரதம் இருக்கலாம், திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தர்சஷ்டி கவசம் போன்றவற்றைப் படித்து பயன்பெறலாம். 

மாலையில் முருகன் கோயிலுக்குச் சென்று திருவிளக்கேற்றி வழிபடுவது குடும்ப நலனுக்கு நல்லது.

முருகன் கோயில் அமைந்துள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வருவதும் அங்குள்ள கோசாலையில் பசுக்களுக்கு உணவளிப்பதும் விசேஷமானது.

பன்னிரு விழிகளால் நம்மை எப்போதும் காத்துவரும் முருகப்பெருமானை அவரது அவதாரத் திருநாளில் தரிசிப்பதும், உபவாசம் இருப்பதும் மிக மிகச் சிறப்பானது.

எனவே, இந்த நாளில் முருகனை வணங்கி, சிறப்பான வாழ்வை மேற்கொள்வோம். ஓம் சரவண பவ ! ஓம் நமசிவாய!
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post