துன்பங்களைப் போக்கும் திருவைந்தெழுத்து மந்திரம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துன்பங்களைப் போக்கும் திருவைந்தெழுத்து மந்திரம் பற்றிய பதிவுகள் :

சைவ சமயத்தின் மூல மந்திரம் ” நமசிவாய” எனும் திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது.

வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாக திருவைந்தெழுத்துக் கூறப்படுகிறது. திருவைந்தெழுத்தான் நமசிவாய இதில்லுள்ள ஒவ்வொரு அட்சரமும் தத்துவம் பொருளுடையவை

* ந. திரோத மலத்தையும்,

* ம. ஆவண மலத்தையும்,

* சி. சிவமயமாயிருப்பதையும்,

* வா. திருவருள் சக்தியையும்,

* ய. ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன.

இதன் உட்பொருள் உயிர்களில் உறைந்துள்ள ஆணவமும் மாயையும் விலகி சிவசக்தி சிவத்துடன் ஐக்கியமாவதே நமசிவாய என்பதன் பயன் என்பதாகும். ஆன்மாவுக்கு நற்றுணையாகவும், உயிர்த்துணையாகவும் அமைவது இம்மந்திரமாகும். வாழ்வில் துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை இயைபாக்கவும் திருவைந்தெழுத்தை உச்சரிப்பது சைவசமயிகளின் முடிபாகும்.

மேற்கூறிய ஐந்தெழுத்துக்களை இடம்மாற்றி ‘சிவாய நம’ என்று ஓதுவதே சூக்கும பஞ்சாட்சரம். தூலப் பஞ்சாட்சரத்தில் இரு மலங்களை பின்னுக்குத்தள்ளி, சிவத்தையும் சக்தியையும் முன்னிறுத்தி ஓதுதல் வேண்டும். முக்திப் பேறு விரும்புபவர்கள் ஓதக்கூடிய மந்திரம் இதுவே.

சிவசிவ என்ற நான்கெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாட்சரம். மும்மலங்களை அறுத்தெறிந்த பின்னரும் தொடரும் வாசனா மலத்தையும் போக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ‘சிவசிவ’ என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதி, உன்னத முக்திநிலையை எய்தலாம். ‘சி’ என்ற ஓரெழுத்து மந்திரமே மகா காரண பஞ்சாட்சரம் என அழைக்கப்படுகிறது. 

நமசிவாய எனும் அருமந்திரம் ஓதினால் எவ்வித உடற்பிணியும் வராது என்ற பொருளில் சேக்கிழார் கூறியுள்ளார். உறக்கத்திலும், உறக்கமில்லா நிலையிலும், நமசிவாய எனும் ஐந்தெழுத்தை நெஞ்சுருகத் தினமும் வழிபடுவோருக்கு எமனும் அஞ்சுவான். ஐந்தெழுத்து மந்திரம் எமனையே அஞ்சும் அளவிற்கு உதைத்துவிடும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

Post a Comment

Previous Post Next Post