கண் நோய் போக்கும் நேத்ரபதீஸ்வரர்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கண் நோய் போக்கும் நேத்ரபதீஸ்வரர் பற்றிய பதிவுகள் :

தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பியன்களரியில் அமைந்துள்ளது அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில். 

ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.

கல்லணைக்குக் கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி. ஒரு காலத்தில் வரலாற்றுப் புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்துதான்சொழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன. அச்சமயம், அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன. ராஜராஜசொழனின் தாய் செம்பியன் மாதேவி கட்டியது, இந்த அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில். 

கருவறை மூலவர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்பாள் காமாட்சியம்மன் தெற்கு நோக்கி தனிச்சன்னிதியிலும் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் எதிர்ப்புறம் வீடுகள் அமைந்திருக்க, மூன்று புறங்களிலும் பசுமை போர்த்திய வயல்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கின்றன. 

கோயிலின் நுழைவாயிலில் நந்தி, கருவறைக்கு வலது புறம் விநாயகரும், இடது புறம் சிவசுப்பிரமணியரும் வீற்றிருக்கின்றனர். பிராகார கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, ருத்ர துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தனிச் சன்னிதியில் சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார். 

ஸ்தல விருட்சம் வில்வ மரத்தடியில் நாகர்சிலைகள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை அடுத்து வருகின்ற மூன்றாம் பிறை நாளன்று, அந்தியும் இரவும் சந்திக்கின்ற பொழுதினில் மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 

அச்சமயம், கண் பார்வை தொடர்பான நோகளோடு வரும் பக்தர்களின் குறைபாட்டினைக் களைந்து அருள் பாலிக்கிறார் இத்தல ஈசன். மூன்றாம் பிறையன்று மூலவருக்கு, ‘தசாவனி தைலம்’ காப்பிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகின்றன. அது என்ன தசாவனி தைலம்? நீலி பிருங்காதி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, மருதாணி, செம்பருத்தி, தேங்கா எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெ, விளக் கெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகிய பத்து வித பொருட்களை அதனதன் சரிவிகிதத்தில் கலந்து உருவாக்குவதே, ‘தசாவனி தைலம்.’ இந்த தசாவனிதைலக் காப்பே மூலவருக்குச் சாத்தப்படுகிறது. பிரார்த்தனைக்காக மூலவருக்குத் தைலக்காப்பிட விரும்புவோருக்கு இந்தத் தைலக்காப்பை கோயில் நிர்வாகமே ஏற்பாடு செய்து தருகிறது.

அன்று மாலை, இரவு கவிழும் சமயம், வானில் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கும் நேரம் பக்தர்கள் கோயிலின் கருவறை பின்புறம் உள்ள பிராகாரத்தில் சூழ்ந்து நின்று வானத்தையே பார்க்கின்றனர். வானில் மெல்லியக் கீற்றாகக் காட்சி தருகிறது மூன்றாம் பிறை நிலவு. பக்தர்கள் சூழ்ந்து நின்று மூன்றாம் பிறையினைத் தரிசித்து வணங்குகின்றனர். அதன் பின்னரே மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு தீபாராதனைகள் தொடங்குகின்றன.

அமாவாசை கழித்து, மூன்றாம் நாளின் இரவு 6.30 மணிக்கு மேல் 7.10 மணிக்குள் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கிவிடும். மழை நாட்கள் மற்றும் கருமேகம் சூழ்ந்த நாட்களில் மூன்றாம் பிறை தெரிய வாய்ப்பு கிட்டாது. அப்போது மேற்குறிப்பிட்ட நேரத்தைக் கணக்கில் கொண்டு, கோயிலில் மூன்றாம் பிறை வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மூன்றாம் பிறை வழிபாட்டு பூஜையின்போது, மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு அத்திப்பழ நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகிறது. வழிபாட்டுக்குப் பிறகு மூலவரின் மீது சாத்தப்படும் தசாவனி தைலக்காப்பு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்குகிறது. பக்தர்கள் இதனை உச்சந்தலையிலும் இமைகள் மீதும் பூசிக் கொள்கின்றனர். 

இது, கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்து, பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. கண் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்ந்து மூன்றாம் பிறை வழிபாட்டினில் பங்கேற்று, தசாவனி தைலக் காப்பை உபயோகப்படுத்தி, கண் தொடர்பான பிரச்னைகளிலிருந்து விடுபடுகின்றனர்".
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post