விநாயகரின் அறுபடை வீடுகளும், அதன் சிறப்புகளும்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவில் விநாயகரின் அறுபடை வீடுகளும், அதன் சிறப்புகளும் பற்றிய பதிவுகள் :

1. திருவண்ணாமலை, 
2. விருத்தாசலம்,
3. திருக்கடவூர், 
4. மதுரை, 
5. பிள்ளையார்பட்டி,
6. திருநாரையூர் 

ஆகியவையே விநாயகருக்கான அறுபடை வீடுகள் ஆகும். விநாயகரின் அறுபடை வீடுகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்.

முதல் படைவீடு - திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

இரண்டாம் படைவீடு - விருத்தாசலம்:

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

மூன்றாம் படைவீடு - திருக்கடவூர்:

எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

நான்காம் படைவீடு - மதுரை:

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன் சித்தி விநாயகரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

ஐந்தாம் படைவீடு - பிள்ளையார்பட்டி:

அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

ஆறாம் படைவீடு - திருநாரையூர்:

திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாராக அருள்பாலிக்கிறார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post