தத்தாத்ரேயர் வழிபாடு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தத்தாத்ரேயர் வழிபாடு பற்றிய பதிவுகள் :

தத்தா என்றால் அளிக்கப்பட்டவர். ஆத்ரேயர் என்றால் அத்ரி முனிவரின் மகன் என்று பொருள்.

அத்ரி மகரிஷிக்கும் அனுசுயா மாதாவிற்கும் பிறந்த தெய்வீக மகனே தத்தாத்ரேயர். அவர் பிரம்மாவின் ஞானத்தை, விஷ்ணுவின் கருணையை, சிவனின் துறவறத்தை ஒன்றாகக் கொண்ட பரம யோகி.

அத்ரி முனிவரும் அனுசுயா தேவியும் மிகப் பெரிய தவசிகளாக இருந்தனர். அனுசுயாவின் பதிவிரதா மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக திரிமூர்த்திகள் சோதனை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

அவர்களின் பக்தியால் மகிழ்ந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரே குழந்தையாக அவதரித்தனர். அந்த தெய்வீக வடிவமே தத்தாத்ரேயர்.

தத்தாத்ரேயர் பொதுவாக மூன்று தலைகள், ஆறு கரங்கள், பின்னால் காமதேனு பசு, நான்கு நாய்கள் உடன் காணப்படுகிறார்.

இதன் அர்த்தம் மூன்று தலைகள் பிரம்மா – படைப்பு. விஷ்ணு – காப்பு. சிவன் – அழிவு. நான்கு நாய்கள் நான்கு வேதங்களின் அடையாளம். பசு - பூமாதேவி மற்றும் கருணையின் சின்னம்.

தத்தாத்ரேயர் யோகிகளின் குரு. அவதூதர். ஞான மார்க்க உபதேசகர். துறவறத்தின் சின்னம் என்று போற்றப்படுகிறார்.

அவர் இயற்கையிலிருந்தே 24 குருமார்களிடம் ஞானம் கற்றதாக “அவதூத கீதை” மற்றும் புராணங்களில் கூறப்படுகிறது.

தத்தாத்ரேயரின் 24 குருக்களில் சிலர். பூமி, காற்று, ஆகாயம், நீர், அக்னி, சந்திரன், சூரியன், தேனீ, பாம்பு, சிலந்தி. இவ்வுலகிலுள்ள அனைத்திலிருந்தும் ஞானம் பெறலாம் என்பதை அவர் போதித்தார்.

மந்திரம்:

“ஓம் ஸ்ரீ குரு தத்தாத்ரேயாய நம”

தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம்

ஜடாதரம் பாண்டுரங்கம்
சூலஹஸ்தம் கிருபாநிதிம்
சர்வரோகஹரம் தேவம்
தத்தாத்ரேயம் அஹம் பஜே

தத்தாத்ரேயம் ஒரு தெய்வ வடிவம் மட்டுமல்ல; “உலகமே குரு” என்ற உயர்ந்த ஞானத்தை உணர்த்தும் ஆன்மீக தத்துவமாகும். அவரை வழிபடுவது பக்தி, யோகம், ஞானம் மற்றும் குரு அருளைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழியாக கருதப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post