அற்புதங்கள் நிறைந்த ஸ்ரீகாளஹஸ்தி ஆலயம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அற்புதங்கள் நிறைந்த ஸ்ரீகாளஹஸ்தி ஆலயம் பற்றிய பதிவுகள் :

ஸ்ரீ என்பது சிலந்தியையும், காளம் என்பது நாகத்தையும், அத்தி என்பது யானையையும் குறிப்பதால் ஸ்ரீ காளஹஸ்தி என பெயர் பெற்று விளங்குகிறது.

சைவ ஸ்தலமான ஸ்ரீ காலஹஸ்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கிற பெயரோடு, ஞானப்பிரசன்னாம்பிகை தாயாரோடு அருள் பாலிக்கின்றார்.

திருமணத்தடை நீங்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ராகு-கேது பரிகார பூஜை செய்து வருகின்றனர். பஞ்சபூதங்களில் வாயுவிற்காக கட்டப்பட்ட இத்திருத்தலம் 500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்று கூறப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு எத்தனை குறைகள் இருந்தாலும் உடனே நீங்குவதாக நம்பிக்கையுள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் வனமாக இருந்த இந்த இடத்தில் வாயு லிங்கமாக தோன்றிய சிவபெருமானை வழிபட சிலந்தி ஒன்று தினமும் வருமாம்.

மழையில் நனைந்த சிவபெருமானைக் கண்ட அந்த சிலந்தி தன்னுடைய உமிழ் நீரில் இருந்து உருவாகும் சிலந்தி வலையை பின்னி வைத்ததாம்.

பெரும் இடி ஒன்று இடித்ததில் அந்த வலை எரிந்து சாம்பலானது. சிலந்தியால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்து போனதாம்.

இதனால் அந்த சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அதற்கு முக்தி கொடுத்தாராம்.

அதே போல தினமும் நாகம் ஒன்று அந்த லிங்கத்தை ஆரத்தழுவி மாணிக்கங்களை கக்கி அர்ச்சனையாக செய்து வழிபடும். அதற்கு பின்னால் வரும் யானை ஒன்று தன் தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து அபிஷேகம் செய்யும். பின் மலர்களை பறித்து வந்து அர்ச்சனையும் செய்து வரும்.

இதனால் அந்த மாணிக்கங்கள் கீழே விழுந்து சிதறி விடுவது உண்டு. தொடர்ந்து இது போல் நடந்து கொண்டிருக்க அந்த நாகத்திற்கு சந்தேகம் வந்தது. யானை இது போல் செய்வதை அந்த நாகம் ஒரு நாள் பார்த்து விட்டது. உடனே கோபமுற்ற நாகம் யானையின் தும்பிக்கையினுள் சென்றுவிட்டு மூச்சடைக்க செய்தது.

சுவாசிக்க முடியாமல் அந்த யானை பாறையில் மோதி மோதி கடைசியில் இரண்டும் இறந்து போனது. இவைகளின் பக்தியை மெச்சிய சிவபெருமான் இவர்களுக்கும் முக்தியை கொடுத்தார் என்று ஸ்தலபுராணம் எடுத்துரைக்கிறது.

இந்த தலத்தில் வீற்றிருக்கும் காளத்திநாதர் உருவத்தில் கீழே இரண்டு தந்தங்களும், இடையில் பாம்பும், பின்புறம் சிலந்தியும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் திருக்காளஹஸ்தி ஒன்று.

ஓம் நமசிவாய நமஹ..!

சர்வத்தையும் படைத்த
          சிற்றம்பல நாதனே!
சர்வத்திலும் நிறைந்தாய், 
         சர்வமும் விழைந்தே;
அர்ப்பணிக்கு முள்ளத்தில், 
        அரியாசனம் கொண்டே
முற்பிறவி வினையறுக்கு, 
         முடிவிலா சோதியனே

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post